டெல்லி: 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை குற்றம் என்றும், தனிப்பட்ட மத சட்டங்களால் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தை மீற முடியாது என்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

குழந்தை திருமணத்திற்கு (PCMA) எதிரான வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் வகுத்துள்ளனர்.

முன்னதாக, நாடு முழுவதும்  இந்தியாவில்,  குழந்தைத் திருமணங்களை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே பல கட்ட விசாரணை நடைபெற்ற நிலையில்,  அக்டோபர் 18ந்தேதி இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

விசாரயையைத் தொடர்ந்து, வழக்கு குறித்து கருத்து தெரிவித்த  நீதிபதிகள் கூறியதாவது மாவட்ட அளவில் குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளை நியமிப்பது உள்பட வழிகாட்டுதல்களை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது. அதன்படி,

“ஒரு பெண் குழந்தை பருவத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ​அவரது ​மூளை வளர்ச்சியின் முக்கிய காலகட்டத்தில் கல்வி தடை செய்யப்படுகிறது, மேலும் திருமணத்தின் போது ஒரு பெண்ணின் வயது, அவரது கல்வியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது”

“குழந்தை திருமணத்தின் நிகழ்வில், ஒரு நபரின் பாலுறவுக்கான உரிமை திட்டமிட்டு அழிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே குழந்தை பாலியல் ரீதியாகத் தாக்கப்படுவதிலிருந்து தாக்குதல் தொடங்குகிறது”.

எந்தவொரு மதத்தின் தனிப்பட்ட சட்டங்களாலும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாது;

குழந்தை திருமணங்கள் தங்கள் துணையை தேர்ந்தெடுக்கும் தனிநபா் உரிமையைப் பறிக்கும் செயலாகும்

குழந்தை திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் தடை செய்யப்பட  வேண்டும்.

குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கென காவல் துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும்.

“பெண்கள் தங்கள் ‘கற்பு’ மற்றும் ‘கற்புரிமை’ ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக திருமணத்திற்குத் தள்ளப்பட்டால், அவளது பாலியல் உரிமை, உடல் சுயாட்சி மற்றும் தனக்குத் தேவையானதைத் தானே தேர்வு செய்யும் சுதந்திரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன”

18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளைத் திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமைக்கு ஈடாகும்.

கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன

குழந்தை திருமணம் தடைச்சட்டத்தை எந்த ஒரு தனி நபர் சட்டங்களாலும் கட்டுப்படுத்த முடியாது .

இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 என்றும் பெண்களின் திருமண வயது 18 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும்,  குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம் (பிசிஎம்ஏ) 2006-ஐத் திருத்துவதன் மூலம் குழந்தை திருமண நிச்சயதார்த்தத்தை சட்டவிரோதமாக்குவது குறித்து பரிசீலிக்குமாறு நாடாளுமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிசிஎம்ஏ குழந்தை திருமண நிச்சயதார்த்தத்தை கையாள்வதில்லை என்பதால், அதன் கீழ் உள்ள அபராதங்களைத் தவிர்க்க இதைப் பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

“சிறுபான்மை குழந்தைகளில் நிச்சயிக்கப்படும் திருமணங்களும் சுதந்திரமான தேர்வு, சுயாட்சி, ஏஜென்சி மற்றும் குழந்தைப் பருவத்தை மீறும் விளைவைக் கொண்டிருக்கின்றன.  அவர்கள் முதிர்ச்சியடைந்து, ஏஜென்சியை உறுதிப்படுத்தும் திறனை உருவாக்குவதற்கு முன், அவர்களது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது அவர்களிடமிருந்து பறிக்கிறது” என்று நீதிமன்றம் கூறியது.

குழந்தை திருமணத்தைத் தடுக்க முயற்சிகளை எடுக்காமல் வழக்கை அதிகரிப்பது மட்டுமே நோக்கமாக இருக்கக்கூடாது” என்று  கூறிய நீதிபதிகள்,  குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீதான குற்றமயமாக்கலின் விளைவைக் கவனத்தில் கொண்டு விழிப்புணர்வை உருவாக்குவதற்கான “சமூகத்தால் இயக்கப்படும் அணுகுமுறையை முன்னெடுக்க வேண்டும் என்று” தீர்ப்பு வலியுறுத்தி உள்ளது.

குழந்தை திருமண தடுப்புச் சட்டம், 2006 (பிசிஎம்ஏ) காரணமாகக் குழந்தைத் திருமணங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலும் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.