உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களை அனுப்ப வடகொரியா முடிவு செய்துள்ளதாக உளவு நிறுவனத்தை மேற்கோள் காட்டி தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“உக்ரைனில் நடக்கும் போருக்கு சிறப்புப் படைகள் உட்பட 12,000 வீரர்களைக் கொண்ட நான்கு படைப்பிரிவுகளை அனுப்ப வடகொரியா சமீபத்தில் முடிவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் அனுப்பும் பணி தொடங்கிவிட்டதாகவும் தேசிய புலனாய்வு சேவை (NIS) தெரிவித்துள்ளது” என்று Yonhap செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரிவான செயற்கைக்கோள் படங்களை வெளியிட்ட சியோலின் உளவு நிறுவனம், வட கொரியா 1,500 சிறப்புப் படை வீரர்களைக் கொண்ட ஆரம்பக் குழுவை ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக்கிற்கு அனுப்பியுள்ளதாகவும், விரைவில் மேலும் அதிகமான துருப்புகள் அனுப்பப்படும் என்றும் கூறியது.
NIS அறிக்கையில், “கடந்த 8ம் தேதி முதல் 13ம் தேதி (அக்டோபர்) வரை, வடகொரியா தனது சிறப்புப் படைகளை ரஷ்ய கடற்படை போக்குவரத்து கப்பல் மூலம் ரஷ்யாவிற்கு கொண்டு சென்றது” என்று தெரிவித்துள்ளது.
NISன் இந்த அறிக்கை உக்ரைனுக்கு எதிரான போரில் வடகொரியாவின் இராணுவ பங்கேற்பின் தொடக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதையடுத்து தென்கொரிய அதிபர் யூன் சுக் யோல் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்க அவசர பாதுகாப்புக் கூட்டத்தை கூட்டியதாகக் கூறப்படுகிறது.