டெல்லி: ரயில்களின் பயணம் செய்ய விரும்பும் பயணிகளின் டிக்கெட் முன்பதிவை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து இந்திய ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. . இந்த புதிய நடவடிக்கை நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இது மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக, 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில்களில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வந்த நிலையில், தற்போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறை நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு 365 நாட்கள் முன்பதிவுக் காலம் என்ற அளவில் மாற்றம் எதுவும் இல்லை எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் முன்பதிவு காலம் 60 நாட்களுக்குக் குறைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் 1ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
அதேவேளையில், ஏற்கனவே பலர், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், அதுகுறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட்டுகள் அனைத்தும் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பகல் நேரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களான தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களின் டிக்கெட் முன்பதிவு நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.