சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம்  செய்யும் வகையில்,  தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டு உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

தீபாவளி  சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக  நாளை மறுதினம்(19ந்தேதி) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் வகுக்கப்பட உள்ளது.

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ந்தேதி வியாழக்கிழமை வருகிறது. இதனால், பலர் புதன்கிழமை சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். பின்னர் தீபாவளி மற்றும் வார விடுமுறை முடிந்து சனி, ஞாயிறுகளில்தான் சென்னை திரும்புவார்கள். இதையொட்டி, புதன்கிழமை முதல் ஞாயிறு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலான பேருந்துகள் தேவைப்படும்.

ஏற்கனவே அரசின் தேவைக்கு தனியாரிடம் இருந்து வாடகைக்கு பேருந்துகள் எடுத்து இயக்கப்பட இருப்பதாக அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு வாடகைக்கு பேருந்துகளை எடுத்து இயக்கும்  சூழல்  ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தீபாவளி சிறப்பு பேருந்துகள்  இயக்குவது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் அக்டோபர் 19ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளதாகவும்,  இந்த ஆலோசனை கூட்டத்தில், போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள்  கலந்து கொள்ள உள்ளனர்.

இதில் எவ்வளவு பேருந்துகளை எத்தனை நாள் இயக்கலாம், எத்தனை லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்தே, இறுதியாக எத்தனை பேருந்துகள் இயக்கப்படும் என்பது தெரிய வரும் என   போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.