சென்னை: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரியவகை பச்சோந்தி, உடும்பு, கருங்குரங்கள் போன்றவை சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்க வனப்பகுதியில்  வசிக்கும்,  அரியவகை 52 பச்சோந்திகள் மற்றும் 4 கருங்குரங்குகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

மலேசிய  தலைநகர் கோலாலம்பூரிலிருந்து,  சென்னை  வந்த பயணிகள் விமானத்தில்,  வந்த பயணிகளிடம்  சுங்க அதிகாரிகள் வழக்கம்போல் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது மலேசியாவிலிருந்து சுற்றுலாப் பயணியாக வந்த  பெண் ஒருவர் கொண்டு வந்த  இரண்டு பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அந்த கூடையில் என்ன உள்ளது என்பது குறித்த அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு அந்த பெண் சரியான முறையில் பதில் அளிக்காத நிலையில், சந்தேகமடைந்த அதிகாரிகள், அந்த கூடைகளை பறிமுதல செய்து சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த கூடைகளுக்குள் அரியவகை உயிரினங்கள் இருந்தது தெரிய வந்தது.   Green iguana எனப்படும் ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்தி மற்றும் உடும்பு  52ம், ஜியாமங்க் ஜிப்பான் என்ற ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகள் 4ம் இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் உடனே வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து வன விலங்குகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த மலேசிய பெண் பயணியில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த  பெண் பயணி கொண்டு வந்த அபூர்வ உயிரினங்களை வாங்கி செல்வதற்காக, சென்னையைச் சேர்ந்த ஒரு ஆண், விமான நிலையத்தின் வெளியே காத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபரையும் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து ஆபத்தை வரவழைக்கும் இந்த உயிரினங்களை மீண்டும் மலேசியாவுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான  செலவினங்களை அதை எடுத்து வந்த  பயணி மற்றும் அதை வாங்க வந்திருந்த மற்றொரு  நபரிடமே வசூலிக்கவும் என சுங்கத்துறைக்கு அறிவுறுத்தினர்.

அதன்படி சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், சென்னையிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற தனியார் பயணிகள் விமானத்தில், இந்த 56 உயிரினங்களையும், மலேசிய நாட்டிற்கே திருப்பி அனுப்பினர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை சுங்கத்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.