இந்திய விமானங்களுக்கு தொடர் வெடிகுண்டு மிரட்டல் வருவதை அடுத்து முக்கிய விமான வழித்தடங்களில் ஏர் மார்ஷல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1999ம் ஆண்டு IC 814 விமானம் ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்திய விமானங்களில் ஏர் மார்ஷல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான சிறப்பு பயிற்சி பெற்ற இந்த ஏர் மார்ஷல்கள் அல்லது ஸ்கை மார்ஷல்கள் விமான கடத்தல் முயற்சிகளை சமாளிக்க பயணிகள் விமானங்களில் ரகசியமாக பயணம் மேற்கொள்வார்கள்.

சாதாரண உடையில் இருக்கும் இந்த ஸ்கை மார்ஷல்கள், பாதுகாப்பு தேவைக்காக துப்பாக்கியை மறைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், தேசிய பாதுகாப்புக் காவலர் (NSG) சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பணியாளர்கள் நடுவானில் பயணிகள் விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் முக்கிய சர்வதேச வழித்தடங்களில் இயங்கும் விமானங்கள் தவிர சில முக்கிய உள்நாட்டு வழித்தடத்திலும் பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில், விமான நிறுவனங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் அதிகரித்து வருவதை அடுத்து விமானங்களில் ஸ்கை மார்ஷல்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், புதிய ஏர் மார்ஷல்களின் குழு, முக்கிய சர்வதேச வழித்தடங்களில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து காபூல், காத்மாண்டு, கொழும்பு, கனடாவின் சில நகரங்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள சில இடங்களுக்குச் செல்லும் விமானங்கள் இந்த முக்கியமான வழிகளில் இடம்பெற்றுள்ளது.

இந்த விமான வழித்தடங்களில் உள்ள அச்சுறுத்தலைப் பொறுத்து ஸ்கை மார்ஷல்களின் எண்ணிக்கை ஒரு விமானத்திற்கு இரண்டு முதல் ஆறு வரை இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் குறித்த காவல் துறை விசாரணையை அடுத்து அந்த நபர்களுக்கு விமானங்களில் பயணிக்க தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.