டெல்லி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள வயநாடு மக்களவை தொகுதியில்  காங்கிரஸ்  கட்சியின்  வேட்பாளராக பிரியங்கா கசாந்தி வத்ரா பெயர்  பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதற்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்,   வயநாடு மக்களவை தொகுதி மற்றும் 47 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி  இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது.

அதன்படி,  கேரளா மாநிலம் வயநாடுக்கும் நவம்பர் 13-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் எண்ணிக்கை நவம்பர் 23ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் இருந்து மக்களவை மற்றும் சட்டப் பேரவைக்கு நடைபெறும் இடைத்தேர்தலில்  களமிறங்கும்  கட்சி வேட்பாளர்களாக நியமிக்கும் திட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, வயநாடு மக்களவை தொகுதிக்கு பிரியங்கா காந்தியின் பெயரும், பாலக்காடு சட்டமன்ற தொகுதிக்கு ஸ்ரீராகுல் மம்கூட்டத்தில் என்பவரும், சாலக்காரா (தனி)  தொகுதிக்கு  ரம்யா ஹரிதாசும் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.