சென்னை: மழை வெள்ளத்திதால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ அதிமுக சார்பில் சமூக வலைதள குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு ‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதை அதிமுக பொதுச்செயலாளர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களுக்கு உதவ தமிழ்நாடு அரசு, சென்னை மாநகராட்சி பல்வேறு உதவிகளை செய்து வரும் நிலையில், திமுக, அதிமுக, தேமுதிக என அரசியல் கட்சிகளும் தங்களது தொண்டர்கள் மூலம் பல்வேறு நிவாரண பணிகளை முடுக்கிவிட்டு உள்ளன. இந்த நிலையில், மழை களத்தில் சென்னை மக்களுக்கான மழை நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுக சார்பில் தனி விரைவு நிவாரண குழு (‘ரேபிட் ரெஸ்பான்ஸ் டீம்’ அமைத்து எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மழை வெள்ளத்தால் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், அதிமுக சார்பில் உதவ ஐடி விங் சார்பில் தனி விரைவு நிவாரண குழு (Rapid Reponse Team) அமைத்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள் நின்றது.
தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, மீண்டும் ஐடி விங் சார்பில் தனி விரைவு நிவாரண குழு(Rapid Response Team) அமைக்கப்பட்டுள்ளது. சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னதாக சென்னையில் மழை வெள்ள நீர் தேங்குவதில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட குழுவினர் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடவும்; கனமழை பெய்யும் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும் ஸ்டாலினின் தி.மு.க. அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டார்.