சென்னை: வங்கக்கடலில் உருவாகி உள்ள கதாற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நகர்வதால் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதையொட்டியே இன்று சென்னைக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, புதுச்சேரி உள்பட பல மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது சென்னையிலிருந்து 440 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியிலிருந்து 460 கிலோ மீட்டர் தொலைவிலும், நெல்லூரிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இது நாளை அதிகாரை சென்னை அருகே கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்
இதன் காரணமாக, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள மாவட்டங்களில் இன்று அதிக கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று 220 மி.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலுார், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், அரியலுார், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், 12 முதல் 21 செ.மீ., வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்த பகுதிகளுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தர்மபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் இன்று தமிழ்நாடு அரசு பொதுவிடுமுறை அறிவித்து உள்ளது.