மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

இதனுடன் 15 மாநிலங்களில் உள்ள 48 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

வயநாடு மற்றும் நாண்டட் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் வயநாடு மக்களவை தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் வெற்றிபெற்ற மற்றொரு தொகுதியான ரே பரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்டு வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து ராகுல் காந்தியுடன் வயநாடு மக்களுக்கு உள்ள தொடர்பை உறுதிப்படுத்த பிரியங்கா காந்தி அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளராக நிறுத்தும் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.