சென்னை: தமிழ்நாட்டில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் காரணமாக இன்று இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தற்போது வலுப்பெற்றுள்ளது. இதரன் காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில், 5 நாட்கள் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மேலும் நாளையும் (அக்டோபர் 16ம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை (204.மி.மீ) பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.15 ) வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது என்றும், அதன் காரணமாக இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
அதன்படி, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டையில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்து உள்ளது.