திருச்சி: தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையிறங்க முடியாமல் பரபரப்பை ஏற்படுத்திய ஏர்இந்தியாவின் சார்ஜா விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்து. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின், கவர்னர் ஆர்என்ரவி பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உடனே அதை தரையிறக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால், அதன் சக்கரங்கள் வேலைசெய்யாததால், விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் எழுந்தது. இதுகுறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
முன்னதாக, 141 பயணிகளுடன் மாலை 5.40 மணிக்கு புறப்பட்ட விமானத்தின் சக்கரங்கள் மீண்டும் விமானத்தின் உள்ளே செல்லாததால், அதை மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. விமானத்தில் உள்ள எரிபொருள் தீரும் வகையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக திருச்சிக்கு மேலாக வானத்தில் விமானம் வட்டமடித்து வந்தது. இந்த விமானத்தில், 140 பயணிகள் இருந்ததால், அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்,
விமானத்தை மீண்டும் தரையிறக்கும்போது எதிர்பாராத விபத்து ஏற்பட வாய்ப்பு இருந்ததால், தீப்பற்றுவதை தவிர்க்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்கும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் 18 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. மேலும் மருத்துவர்கள் குழுவும் தயார் நிலையத்தில் இருந்தனர். இதனால் விமான பயணிகள் மட்டுமின்றி, விமான நிலையத்தில் குழுமியிருந்த பொதுமக்கள்,, அதிகாரிகள், காவல்துறையினர் என அனைவரும் பதற்றதுடன் காணப்பட்டனர்.
வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானத்தின் எரிபொருள்முடிவடைந்த நிலையில், விமானியின் சாதுர்யத்தில், திருச்சி விமான நிலையத்தில் 141 பயணிகளுடன் பத்திரமாக தரையிறங்கியது. அதன் பிறகே விமானத்தில் இருந்த பயணிகள், அவர்களது உறவினர்கள், விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகள் தங்களது உறவினர்களிடம் வீடியோ காலில் பேசிய காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த மாநகர காவல் ஆணையர் காமினி, “மாலை 5:40 மணிக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக வானில் வட்டமடித்து வருகிறது. எரிபொருள் தீர்ந்த பிறகு பாதுகாப்பாக தரையிறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அச்சப்படும் அளவுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 108 பேர் சார்ஜா பயணம் மேற்கொண்டனர். 36 பேர் தங்களது பயணத்தை தள்ளிப் போட்டுள்ளனர். வேறு சிலர் சார்ஜா பயணத்தை ரத்து செய்து பயணத்தொகையை ஏர் இந்தியாவிடம் பெற்றுக் கொண்டனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து:
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், “சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சனை என்று கேள்விப்பட்டேன். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தேன். தற்போது விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது என்ற செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். விமானிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறுக்கு பிறகு அதை பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக அதன் விமானி மற்றும் துணை விமானிக்கு நன்றி. இந்த முயற்சி மற்றும் பதற்றமான தருணத்தில் காக்பிட் மற்றும் கேபின் குழுவினரின் துணிச்சல் மற்றும் அமைதியான தொழில்முறை செயல்பாடு உண்மையிலேயே சிறப்புமிக்கது. விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய அவசர சேவைகளில் ஈடுபட்டோர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வ பாராட்டுக்கள். பயணிகள் அனைவரும் இனிதான பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.