சென்னை: முரசொலி செல்வம் மறைவையொட்டி,  மாநிலம் முழுவதும்  திமுகவினர் துக்கம் அனுசரிக்கும் வகையில்,  தி.மு.க. கொடி 3 நாட்கள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுரகன் அறிவித்து உள்ளார்.

முரசொலி செல்வம் மறைவை ஒட்டி, திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக கட்சிக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது

மறைந்த முதல்வர் கருணாநிதியின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலி நாளிதழில் பணியாற்றி வந்தார். சிலந்தி என்ற புனைப் பெயரில் , முரசொலி நாளிதழில் பல கட்டுரைகளை எழுதி வந்தார். இந்நிலையில், இன்று காலை ‘முரசொலி’ செல்வம் காலமானார்.

இவர்,   முரசொலி செல்வம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் கணவர், முதலமைச்சர் ஸ்டாலினின் அக்காள் கணவர்.  இவர் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இன்று மரணம் அடைந்தார்.  அவரது உடல் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு,   கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள்   அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகம் தொடங்கப்பட்ட காலம் தொட்டு கழகத்தின் கொள்கை பரப்பியவரும்-இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றவருமான முரசொலி செல்வம் மறைவினையொட்டி தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும் கழகக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்து உள்ளார்.