சென்னை: ஆயுத பூஜை   பண்டிகையையொட்டி,  தென்மாவட்ட மக்களுக்காக  6 பொதுப்பெட்டிகளுடன் எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.

நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் ஒன்றை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இதில் ஆறு இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06193) அக்டோபர் 10 மற்றும் 12 ஆகிய நாட்களில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.20 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06194) அக்டோபர் 11 மற்றும் 13 ஆகிய நாட்களில் கன்னியாகுமரியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். ‌

இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.