திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவிலில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி வரும் 14ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்படும் என அமைச்சம் சேகர்பாபு தெரிவித்தார்.
பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கி திண்டாடும் திருச்செந்தூர் கோவில் வளாகத்தில், வளாக மேம்பாடு, அன்னதானம் கூடம், அழிகிணறு நடைபாதை, கடற்கரைக்கு பாதை அமைத்தல், கடற்கரையில் சுகாதார வளாகம், பாதுகாப்பு தங்குமிடங்கள், மருத்துவ மையம் மற்றும் குடமுழுக்கு விழாவை நடத்துதல் உள்பட பல்வேறு பணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் ரூ. 200 கோடி நன்கொடை அளித்துள்ளார். அத்துடன் தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி சேர்த்து ரூ.300 கோடி செலவில் பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்காக பெருந்திட்ட வளாகப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் தருவாயில் உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று (அக்.9) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப் பணிகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதிக்கான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதியை வரும் அக்.14 ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அதன்பிறகு கோவில் தெப்பக்குளம் புனரமைப்பு, வேதிக் பள்ளி, செயற்கை நிருற்றுகள் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். “
அடுத்த ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் திருச்செந்தூர் கோவிலில் கும்பாபிசேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றவர், தற்போது நடக்கும் புனரமைப்பு பணிகளை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
” தற்போது கட்டப்பட்டுள்ள பக்தர்களுக்கான விடுதியில் மொத்தம் 100 அறைகள், 20 சிறப்பு அறைகள், ரெஸ்டாரண்ட் வசதிகள் உள்ளது.
இந்த கந்தசஷ்டி விழாவையொட்டி இந்த அறைக்கான முன்பதிவு என்பது அக்டோபர் 15ம் தேதி முதல் தொடங்கஉள்ளது. இந்த விடுதிக்கான கட்டணம் என்பது தனியார் லாட்ஜை விட குறைவாகும்” என்றார்.
இந்த விடுதியில் தனியார் விடுதியை ஒப்பிடும்போது கட்டணம் மிகவும் குறைவாகும். அதாவது 2 பேர் தங்கக்கூடிய சாதாரண அறைக்கு ரூ.500, ஏசி அறைக்கு ரூ.750, அதோடு 10 பேர் மொத்தமாக தங்கக்கூடிய டார்மெட்டரிக்கு ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது. அப்படி பார்த்தால் ஒருவருக்கு ரூ.100 என்ற அளவில் மட்டுமே கட்டணம் இருக்கும் என்பதால் பக்தர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்வின் போது அமைச்சர் சேகர் பாபு உடன் தமிழ்நாடு சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், கூடுதல் ஆணையர் சுகுமார், திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம், நகராட்சி துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலர் வாள் சுடலை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.