சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் சாம்சங் ஊழியர்களை வழியிலேயே மடக்கி கைது செய்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சாம்சங் ஆலை ஊழியர்கள் தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  அவர்களை போராட்டம் நடத்த தடையில்லை என நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருந்தாலும், போராடும் தொழிலாளர்களை  அப்புறப்படுத்துவதிலும், கைது செய்வதிலு  தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள  ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு  பணியாற்றும் ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தை  தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றும் சுமுகமான முடிவு இன்னும் எட்டவில்லை. இதனால், அரசு சார்பில் 3 அமைச்சர்கள் சாம்சங் போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், தொழிற்சங்கம் அமைக்க நிர்வாகம் ஒப்புகொள்ளாததால்,   தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்துக்கு திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்கள் போராட்டக் களத்துக்குநேரில் செல்ல இருந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு  போராட்ட  பந்தல் அகற்றப்பட்டது  மேலும் முக்கிய நிர்வாகிகளும் நள்ளிரவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இது பரபரப்பை   ஏற்படுத்தியது.

இதையடுத்து நேற்று சாம்சங்க ஊழியர்களுடன்  சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் உள்பட பலர்  போலீசாரின் அறிவுறுத்தலை மீறி அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர்  குண்டு கட்டாக தூக்கிச் சென்று  செய்து கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் சார்பாக தொடரப்பட்ட அவசர வழக்கில் போராட்டம் நடத்த தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பிறகும் போராட வந்தவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.  இன்று காலை  சுங்குவார்சத்திரத்தில்  போராட வந்த சாம்சங் ஊழியர்கள் 30 க்கும் மேற்பட்டோரை வழியிலேயே போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர். மேலும், போராட்டம் நடைபெறும் இடத்திற்கு நான்கு புறத்திலும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் போராட்டம் நடத்தப்படும் பந்தல் அருகேவும் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.