சென்னையில் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி அதை நேரில் கண்டுகளித்த 10 லட்சம் பேரை மட்டுமன்றி ஒட்டு மொத்த இந்தியர்களையும் ஆச்சரியமும் பெருமையும் அடையச் செய்தது என்றால் அது மிகையாகாது.
வினாடி கச்சிதம் (Perfection to the Second) என்று சொல்லக்கூடிய வகையில் எந்த பிசகும் இல்லாமல் இந்திய விமானப் படை விமானிகளின் சாகசம் முழுமையாகவே இருந்தது.
நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியைக் காண காலை 7 மணி முதலே அணி அணியாக மெரினாவில் திரண்ட மக்கள் கூட்டம் சிறுக சிறுக 10 லட்சத்தைக் கடந்து சாதனை படைத்தது.
1 மணிக்கு நிகழ்ச்சி முடிந்ததும் கூட்டம் அதிகமாக இருந்த மெரினா பக்கத்தில் இருந்து திருவல்லிக்கேணி வழியாக அண்ணா சாலைக்கும் பறக்கும் ரயில் நிலையத்திற்கும் மக்கள் கூட்டம் படையெடுத்தது.
நெரிசலோ தள்ளுமுள்ளோ இல்லாமல் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படுத்தாமல் அத்தனை லட்சம் மக்களும் ஒரே நேரத்தில் கலைந்த போதும் வெளியிலின் தாக்கம், பசி, தாகம் ஆகிய காரணங்களால் மூச்சு திணறல் ஏற்பட்டு 230 பேர் மயங்கி விழுந்தனர்.
இதில் 90 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியைக் காண வந்த 5 பேர் கடுமையான வெயிலின் காரணமாக சுருண்டு விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்னரே இறந்தனர்.
ரஃபேல், சுகோய், மிக் உள்ளிட்ட 72 போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒரு வாரகாலமாக பயிற்சி மேற்கொண்டு சென்னை மக்களை மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்களையும் ஒட்டுமொத்த இந்திய மக்களையும் தங்கள் வீர தீர சாகசங்கள் மூலம் மெய்சிலிர்க்க வைத்த போதும் விலைமதிப்பற்ற 5 பேரின் உயிர்பலி அந்த சாகசங்களை நொடியில் மாற்றிவிட்டது.
சென்னை மாநகராட்சி ஊழியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து காவலர்கள், ஊர்காவல் படையினர், சுகாதார பணியாளர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், போக்குவரத்து ஊழியர்கள் என ஆயிரக்கணக்கானோர் இந்திய விமானப் படையின் இந்த சாகச நிகழ்ச்சிக்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டபோதும் இந்த உயிரிழப்பு சம்பவம் இவர்களுக்கு ஒரு படிப்பினையாகவே அமைந்ததே தவிர சாதனையை கொண்டாடும் வகையில் அமையாமல் போனது துரதிர்ஷ்டவசமானது.