சென்னை:  சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று  அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து இன்று  மாலை 3 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொடங்கி, சர்வதேச தோல்வி நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.  இங்குள்ள சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வரும்  தொழிலாளர்கள் கடந்த மாதம் 9ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு, சங்க அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.  இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் இணைந்து இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோர் முன்னிலையில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.  ஆனால் அதில் சமூக உடன்பாடு ஏற்படவிங்லலை. இதைத்தொடர்ந்து மீண்டும் மாலை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில்,  சுமூக உடன்பாடு ஏற்படும் என எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் நிறுவன ஊழியர்களுடன் ஏற்கெனவே 5 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் இன்று தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் ரமேஷ், ஆணையர் கமலக்கண்ணன் முன்னிலையில் 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் சவுந்தரராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.  சாம்சங் தொழிற்சாலை தரப்பில் நிர்வாக ஆலோசகர் உள்பட 4 பேர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றனர்.  இதைத்தொடர்ந்து இன்று 6வது கட்டமாக சாம்சங் நிறுவன ஊழியர்களுடன்   முத்தரப்பு பேச்சுவார்த்தை கோட்டையில் இன்று முற்பகல்  நடைபெற்றது.  இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று மாலை 3 மணியளவில் அமைச்சர்கள் குழு தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.