டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஜம்மு – காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியமைக்கப் போவது யார்? என்பது தொடர்பாக எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி உள்ளன.
ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணி முன்னிலை பெறும் என்றும், ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டுள்ளன. இரு மாநிலங்களில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்கும் என்றும், கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை வரும் 8-ம் தேதி ஒரே கட்டமாக எண்ணப்படுகின்றன. இரு மாநிலங்களிலும் 90 தொகுதிகள் உள்ளதால் ஆட்சியைக் கைப்பற்ற 46 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது குறித்த எக்சிட் போல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானாவில் உள்ள 90 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இம்மாநிலத்தில் மொத்தம் 1,031 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும் மொத்தம் 20,632 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, அண்டை மாநிலங்களான டெல்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சி செய்தாலும், ஹரியானாவில் தனது வெற்றிக் கணக்கைத் துவங்க இயலாமல் போகலாம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஹரியானாவைப் பொருத்தவரை, 7 கருத்துக் கணிப்புகள் அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளன. ஜம்மு – காஷ்மீரில் காங்கிரஸ் – தேசிய மாநாட்டு கட்சி (என்சி) கூட்டணி முன்னிலை பெறும் என கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் இதர 4 கருத்துக் கணிப்புகளின்படி அம்மாநிலத்தில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் பாஜக கூட்டணி மற்றும் இண்டியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேவேளையில், அங்கு நியமிக்கப்படும் 5 நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு இருப்பதால், அரசியல் பரபரப்பு ஏற்பட்டள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2014ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. அதன்பிறகு 10 ஆண்டுகளாக சட்டசபை தேர்தல் நடைபெறாமல் இருந்தது. தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு யூனியன் பிரதேசமான பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 தொகுதிகளில் வெல்ல வேண்டும். மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த மாதம் 18 ம் தேதி 24 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகவும், கடந்த மாதம் 25ம் தேதி 26 தொகுதிகளுக்கு 2வது கட்டமாகவும், அக்டோபர் 1ம் தேதி 40 தொகுதிகளுக்கு 3வது கட்டமாகவும் தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா (ஓமர் அப்துல்லாவின் தந்தை) தேசிய மாநாட்டு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.
பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியும் தனித்தனியே களமிறங்கி உள்ளது.
இதனால் ஜம்மு காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை மும்முனை போட்டி என்பது நிலவி வருகிறது.
3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அக்டோபர் 8 ம்தேதி வெளியாக உள்ளது. அன்றைய தினம் யார் ஆட்சியை பிடிப்பார்கள் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் தான் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன.
அதன்படி Gullistan News சார்பில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பி ல் காஷ்மீரில் 4 முனை போட்டி 3 முனை போட்டி நிலவுவதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை என்பது கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைமை படுமோசமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சி 3 முதல் 6 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி 28 முதல் 30 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு சமமாக பாஜகவும் 28 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது.
இது நடந்தால் ஜம்மு காஷ்மீரில் பாஜக தனி பெரும் கட்சியாக மாறும். அதேபோல் மெகபூபாவின் பிடிபி கட்சி 8 முதல் 16 இடங்களில் தான் வெல்லும் என கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஜம்மு காஷ்மீரில் நிச்சயம் தொங்கு சட்டசபை தான் அமையும். காங்கிரஸ் + தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி, பாஜக, மெகபூபா முப்தியின் பிடிபி என யாருக்கும் தனி மெஜாரிட்டி என்பது கிடைக்காது. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை பொறுத்து தான் ஜம்மு காஷ்மீரில் யார் அரியணை ஏற உள்ளனர்? என்பதை சொல்ல முடியும் என்கிறது GUllistan News கருத்து கணிப்பு முடிவுகள்