சென்னை

விசிக நடத்திய மது ஒழிப்பு மாநாட்டில் ராஜாஜியின் கட் அவுட் இடம்பெற்றது குறித்து திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று முன்தினம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மாநாடு உளுந்துார்பேட்டையில் நடைபெற்றபோது திருமாவளவன்

“இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டியது ஒன்று. இதுவரை நாம் பயன்படுத்தாத உருவம் ஒருவர் காந்தி, மற்றொருவர் ராஜாஜி. மது வேண்டாம் என சொல்லும் அனைத்து தலைவர்களின் வாழ்த்தும் நமக்கு தேவை. அரசியலுக்காக இதனை பயன்படுத்தவில்லை. காந்தி கொள்கையில் பலவற்றில் முரண்பாடு உண்டு, ஆனால் உடன்பாடுள்ள இரண்டு கொள்கை மது விலக்கு, மதச்சார்பின்மை”

என்று கூறியிருந்தார்.

மாநாட்டில் ராஜாஜி கட்அவுட் பயன்படுத்தப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு திருமாவளவன்

”விடுதலை சிறுத்தைகள் ராஜாஜிக்கு கட்அவுட் வைத்துவிட்டார்கள் என சர்ச்சையை கிளப்புவதின் வாயிலாக, திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் ஏதாவது இடைவெளியை ஏற்படுத்த முடியுமா? என்று பார்க்கிறார்கள். இப்படி செய்வதன் வாயிலாக திமுகவை சேர்ந்த சமூக ஊடக தளங்களில் பணியாற்றும் தோழர்கள் கடுமையாக விமர்சிப்பார்கள். அப்போது விசிகவிடம் இருந்து ஏதாவது பதில் வரும். அதன் வாயிலாக ஒரு விரிசலை ஏற்படுத்த முடியுமா? என சிலர் முயற்சிக்கிறார்கள் என்று நான் யூகிக்கிறேன்.

ஏனென்றால் மிகவும் சாதாரணமாக ராஜாஜி உள்ளிட்ட தலைவர்களின் கட்அவுட்டுகளை வையுங்கள் என்று சொன்னதன் பேரில் அவை வைக்கப்பட்டன. உடனே அங்கு ராஜாஜியை அறிமுகப்படுத்துகிறோம், அவரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டோம் என்றெல்லாம் கடுமையான விமர்சனங்களை வைக்கிறார்கள்.

இதில் விசிகவின் நலனில் அக்கறை உள்ளவர்கள் எங்களிடம் நேரடியாக பேசுகிறார்கள். அவர்களிடம் நாங்கள் உரிய விளக்கத்தை கொடுக்கிறோம். ஆனால், விசிக வளரவே கூடாது, அழிய வேண்டும் என நினைப்பவர்கள் எல்லாம் பொங்கி எழுறாங்க. அதனால் இதை வைத்து ராஜாஜியை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டதாக பொறுத்தி பார்க்க வேண்டாம். இந்திய அளவிலான அரசியல் என்பது மொத்தமாக வேறுபட்டது. இதை வைத்துதான் அகில இந்திய அளவில் அரசியலை விரிவு படுத்த வேண்டும் என்று இல்லை.”

என விளக்கம் அளித்த்ள்ளார்.