சென்னை

மார்க்சிஸ்ட் கட்சி பாஜகவின் திட்டங்கள் குறித்து பள்ளிகளில் போட்டி நடத்த உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், வரும் அக்டோபர் 7 முதல் 11 வரை பல்வேறு போட்டிகளை நடத்த உள்ளதாக சுற்றறிக்கை விடுத்துள்ளது. இதில், விவாதப் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள “ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத்” ஆகிய தலைப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றறிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்..

பாலகிருஷ்ணன் தனது எக்ஸ் தளத்தில்

”பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் வரும் அக்டோபர் 7  ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்ஷ்த் பாரத் போன்ற பாஜகவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் பாஜக/ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரவலாக்க முன்னெடுக்கும் இந்த முயற்சியை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை பள்ளிகளின் மேம்பாட்டுக்கு தர மறுக்கும் இதே பாஜக, தன்னுடைய ஆபத்தான கொள்கைத் திட்டங்களை கொண்டு செல்ல பள்ளிகளை பயன்படுத்துவது மிக ஆபத்தான மாணவர் விரோத போக்காகும். இந்த முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இதுபோன்ற தலையீடுகளை மாநில அரசு முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும், ஆசிரியர், மாணவர்களும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்க்க வேண்டுமென சி.பி.ஐ(எம்) வலியுறுத்துகிறது”

என்று பதிவிட்டுள்ளார்.