விருதுநகர்

தமிழக துணை முதல்வர் உதயநிதி 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று விருதுநகர்மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் நடைப்ற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு இணைந்து துணை முதலமைச்சருக்கு செங்கோல் வழங்கினர்.

இந்த விழாவில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2111 பேருக்கு ரூ.42.96 லட்சம் மதிப்பில் பரிசு தொகைகள், 450 ஊராட்சிகளுக்கு ரூ.2.84 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரண தொகுப்புகள், 255 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45.39 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, 20 மாற்றுத்திறனாளிகளுக்கு சுயதொழில் புரிய வங்கி கடன், ஆவின் விற்பனை நிலையம், ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 2,386 பயனாளிகளுக்கு ரூ.3.85 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,

”முதல்வர் கோப்பை போட்டியில் கடந்த ஆண்டு 6 லட்சத்து 71 ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு சுமார் ஒரு மடங்கு அதிகரித்து 11 லட்சத்து 56 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தின் விளையாட்டு வீரர்கள் உலக அளவில் பல சாதனைகளை படைத்து வருகின்றனர். அவர்களை கௌரவிக்கும் வகையில் முதல்வர் மு க ஸ்டாலின் முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி வழங்க உள்ளார்”

என்று தெரிவித்துள்ளார்.