கோவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, கோவை ஈஷா யோக மையத்தில் காவல்துறை மற்றும் சமூகநலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டுள்ளது.

தனது மகள்களை மீட்டுத்தர வேண்டும் என பெற்றோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,   ‘நீங்கள் முற்றும் துறந்த ஞானிகள் ஆகி விட்டீர்களே. பிறகு இதை ஏன் பொருட்படுத்த வேண்டும்.’ என்று கேள்வி எழுப்பினர். மேலும், ‘ஈஷா நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, மற்றவர்களை சன்னியாசி ஆக்குவது ஏன்.’ என்றும் கேட்டனர். இதைத்தொடர்ந்து அங்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டனர்.

கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனைவர் காமராஜ்.  இவர்  தனது மகள்களை மீட்டுத்தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தி ருந்தார். ஏற்கனவே இவர் தொடர்ந்த வழக்கில், அவரது மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி பதில் அளித்த நிலையில், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘எனது மகள்கள் லதா மற்றும் கீதா ஈஷா மையத்தில், யோகா கற்க சென்றனர். பிறகு அங்கேயே தங்கிவிட்டார்கள். அங்கு அவர்களை தனி அறையில் அடைத்து துன்புறுத்துவதாக தகவல் வருகிறது. இதனால் நானும், என் மனைவியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். நான் ஈஷாவிடம் பொது மன்னிப்பு கேட்டால்தான், மகள்களுடன் பேச முடியும் என்று கூறுகிறார்கள். எங்கள் மகள்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சம்பந்தப்பட்ட மகள்கள் மற்றும் பெற்றோர்களிடம் நீதிபதிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையின் பொழுது பெற்றோர்கள் தங்களை அவமானப்படுத்தி விட்டதாக மகள்கள் கூறினர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ‘நீங்களே முற்றும் துறந்த ஞானிகள் ஆன பின் ஏன் அதைப் பொருட்படுத்த வேண்டும்’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதேபோல் ஜக்கி வாசுதேவ் தன் மகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படத்தையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இவர்களுக்கு ஏன் சன்னியாசி நிலை? என கேள்வி எழுப்பிய நீதிபதி,

நாங்கள் யாருக்கும் எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை. ஆனால் பல சந்தேகங்கள் உள்ளது’ என ஐயப்பாடை தெரிவித்தனர். தொடர்ந்து கோவை ஈஷா யோகா மையத்தின் மீது எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஈஷா யோகா மையத்தின் மீதான வழக்குகள் குறித்த விவரங்களை வரும் அக்.4 தேதிக்குள் தர காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், கோவை ஈஷா மையத்தில் அதிகாரிகள் இன்று காலை முதல் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. அதன்படி சமூக நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் மொத்தம் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனும் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார். . டிஎஸ்பி சிவகுமார் மற்றும் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் நல குழுவைச் சேர்ந்த அதிகாரிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட  அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசாரின் அதிரடிப்படை வாகனம், அரசு அதிகாரிகள் வாகனம் என 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளே சென்றுள்ளது.

காமராஜருடைய இரு மகள்கள் மட்டுமின்றி அங்கு இருக்கும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.