சென்னை: பழனி பஞ்சாமிர்தம் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜியை நீதிமன்றம்  உடனடி ஜாமின் வழங்கி விடுவித்த நிலையில், அவர் மீது மேலும் 2 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவ செய்யப்பட்டு உள்ளது. இது அரசியல் பழிவாங்கல் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக,  இயக்குநர் மோகன் ஜி கைதுக்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பவர்களை கைது செய்யாத தமிழக அரசு, கிளி ஜோசியர்களையும், சமூக ஊடகங்களில் பேசுபவர்களையும் கைது செய்து வீரத்தைக் காட்டக் கூடாது என கடுமையாக விமர்சித்து இருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் காவல்துறை ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது என்றும் விமர்சித்திருந்தனர்.

இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குநர் மோகன் ஜி மீது  காவல்துறை மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய வகையில் படங்களை எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குனர் மோகன்ஜி. இவர் எடுத்த  பழைய வண்ணாரப்பேட்டை, திரவுபதி உள்ளிட்ட  படங்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தாலும், ஒரு தரப்பினரின் வரவேற்பை பெற்றது.  மேலும் இவர் பாஜகவுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கும் எதிராகவும் பேசி வந்தார்.

இதனால் அவரை கைது செய்ய காத்திருந்த திமுக அரசு, பழனி பஞ்சாமிர்த விவகாரத்தை கையில் எடுத்து, அவரை கைது செய்து திருச்சி அழைத்துச் சென்றது. நேற்று காலை திருச்சி மாவட்ட காவல்துறையால் கைது செய்யப்பட்ட இயக்குநர் மோகன் ஜியின் கைதுக்கு பாமக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  நேற்று மாலை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நிதிபதி, நீதிமன்ற ஜாமீனில்  விடுவிக்க உத்தரவிட்டார். அவரை கைது செய்வதற்கான உரிய காரணங்கள் இல்லை என காவல்துறையை கடுமையாக விமர்சித்த நீதிபதி, இயக்குநர் மோகன் ஜியை சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார்.  இதனை அடுத்து, மோகன் ஜி விடுதலை செய்யப்பட்டார். இது திமுகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

இநத் நிலையில், தற்போது இயக்குனர் மோகன்ஜி மீது மேலும் 2 வழக்குகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. பழனி தேவஸ்தானம்  சார்பில், பழனி அடிவார காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் மோகன் ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான தகவலை பரப்பியது மற்றும் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜியை நேரில் அழைத்து விசாரிக்க பழனி அடிவார காவல்துறையினர் சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யவும் காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதுபோல,   பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான தகவல்களை பரப்பியதாக பாஜக நிர்வாகிகள் வினோஜ் பி செல்வம் மற்றும் கோவை செல்வகுமார் ஆகியோர் மீது பழனி தேவஸ்தானம் சார்பில் பழனி மலை அடிவார காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் கோவை செல்வகுமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.