பணிச் சுமை மற்றும் கூடுதல் வேலை நேரம் காரணமாக 26 வயதான இளம்பெண் ஆடிட்டர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து எர்ன்ஸ்ட் & யங் EY புனே அலுவலகத்தில் மகாராஷ்டிர மாநில கூடுதல் தொழிலாளர் ஆணையர், ஷைலேந்திரா போல் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வில் மாநில கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் கட்டாயப் பதிவு இல்லாமல் இந்நிறுவனம் செயல்படுவது தெரியவந்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்தவும் அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒன்பது மணிநேரம் என வாரத்துக்கு 48 மணிநேரம் வேலை நேரமாக தொழிலாளர் நலத்துறை வரையறுத்துள்ளது.

இந்த நிலையில், எர்ன்ஸ்ட் & யங் (EY) நிறுவனத்தின் புனே கிளையில் 2024 மார்ச் முதல் எக்சிகியூடிவாக பணிபுரிந்து வந்த கேரளாவைச் சேர்ந்த இளம் பட்டயக் கணக்காளர் (CA), அன்னா செபாஸ்டியன் பேராயில், கடந்த ஜூலை 20ம் தேதி மரணமடைந்தார்.

பணிச் சுமை மற்றும் ஓய்வு இல்லாமல் வேலை செய்ய பணித்ததால் வேலை அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்ததாக அவரது தாயார் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்ற நிலை வேறு யாருக்கும் நிகழக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து இந்த விவகாரம் தொழிலாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் புனே அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

2007 ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த புனே கிளைக்கு EY நிறுவன அதிகாரிகள் இதுவரை தொழிலாளர் நலத்துறையின் அனுமதி பெறவில்லை என்றும் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அதற்காக விண்ணப்பித்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக அனுமதி பெறாததை சுட்டிக்காட்டி அவர்களது விண்ணப்பத்தை தொழிலாளர் நலத்துறையினர் ஏற்க மறுத்துள்ளனர்.

தற்போது தொழிலாளர் நலனுக்கு விரோதமாக EY நிறுவனம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து இது குறித்து விளக்கமளிக்க அந்நிறுவனத்துக்கு தொழிலாளர் நலத்துறை ஏழு நாட்கள் அவகாசம் அளிக்கத்துள்ளது.

26 வயதான இளம்பெண் ஆடிட்டர் வேலை பளு காரணமாக உயிரிழந்தார்… எர்ன்ஸ்ட் & யங் நிறுவனம் மீது பெண்ணின் தாய் குற்றச்சாட்டு…