மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தில் (மூடா – MUDA) கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, 14 வீட்டுமனைகள் முறைகேடாக வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டை கர்நாடக முதல்வர் சித்தராமையா மறுத்து வரும் நிலையில், முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் தவார் சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார். ஆளுநரின் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா கர்நாடக மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, “ஆளுநரின் உத்தரவில் எந்த உள்நோக்கமும் இல்லை. புகார் குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். ஏனெனில், முதல்வரின் நடவடிக்கையால் பலன் பெற்றவர்கள் வெளியாட்கள் அல்ல” என கூறி சித்தராமையாவின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

முதல்வர் சித்தராமையா மீது விசாரணை நடத்த தடை இல்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக பாஜக-வினர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்த நிலையில், ஏற்கனவே பிற மாநிலங்களில் முதல்வருக்கு எதிராக நடைபெற்ற வழக்குகளில் தீர்ப்பு வரும் வரை முதல்வர் பதவியில் நீடித்தது போல் கர்நாடகாவிலும் சித்தராமையா தனது முதல்வர் பதவியில் நீடிப்பாரா அல்லது எதிர்கட்சிகளின் அழுத்தத்துக்கு அடிபணிவாரா என்ற கேள்வி கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதேவேளையில், சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தால் முதல்வர் பதவியை யாருக்கு வழங்குவது என்ற ஆலோசனையில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

அகில இந்திய தலைமைக்கு மிக நெருக்கமாக இருப்பதாகக் கூறப்படும் துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் பெயர் இதில் முன்னணியில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.