சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலை இதுவரை  இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. கிராம் தங்கத்தின் விலை ரூ.7ஆயிரம் ஆக இன்று உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாக மாறி  உள்ளது.

தங்கம் அவ்வப்போது விலை உயர்வதும், குறைவதுமாக போக்கு காட்டிவந்தாலும்,  கடந்த மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரு 15 % லிருந்து 6% ஆக குறைக்கப்பட்டதை அடுத்து, தங்கம் விலை தடாலடியாக குறைந்துவிடும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். அதன்படி பட்ஜெட்டுக்கு பிறகான 5 நாட்கள் தங்கம் மளமளவென சவரனுக்கு ரூ.5ஆயிரம் வரை சரிந்தது. ஆனால் தொடர்ந்து சரியும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சிய வகையில், அதன்பின்னர் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 7000ஐ தொட்டுள்ளது.  கடந்த 10 நாட்களாக  ஏற்றம் இறக்கத்துடன் காண்ப்பட்டு வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (20ந்தேதி)   சவரனுக்கு 480 ரூபாயும், கடந்த சனிக்கிழமை அன்று சவரனுக்கு 600 ரூபாயும், நேற்றைய தினம் ரூ.160ம் என தொடர்ந்து ஏற்றம் கண்ட நிலையில், இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளத.

நேற்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 6,980க்கும், ஒரு சவரன் ரூ. 55,840 என்று விற்பனையான நிலையில், இன்று மேலும் உயர்ந்துள்ளது. அதாவது,  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் ஒரு சவரன் ரூ. 56,000 என்கிற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.7,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.98க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது, சாமானிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடுத்தர மற்றும் ஏழை மக்களின் நம்பிக்கைக்குரிய பொருளாக தங்கம் இருந்து வரும் நிலையில், விலை உயர்வு காரணமாக, இனிமேல் தங்கம் சாமானிய மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.