உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள உலக உணவு இந்தியா 2024 டெல்லி பிரகதி மைதானத்தில் செப் 19 முதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக உலகளாவிய உணவு ஒழுங்குமுறை உச்சிமாநாடு (GFRS) நேற்று நடைபெற்றது FSSAI நடத்திய இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கலந்து கொண்டார்.
அப்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தயாரித்த ஆறாவது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டை (SFSI) ஜே.பி. நட்டா வெளியிட்டார்.
2024ம் ஆண்டுக்கான மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீடு தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2023ம் ஆண்டும் கேரளா முதலிடம் பிடித்த நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான இரண்டாவது இடத்தில் தமிழ்நாடும், ஜம்மு காஷ்மீர் மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது.
மனித வளம் மற்றும் நிறுவன தரவு, இணக்கம், உணவு சோதனை-உள்கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு, மற்றும் நுகர்வோர் அதிகாரமளித்தல் ஆகிய ஐந்து அளவுகளின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை இந்த குறியீடு தீர்மானிக்கிறது.
2019ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த தரவரிசை பட்டியலில் 2022ம் ஆண்டு தமிழ்நாடு முதலிடத்தை பிடித்திருந்தது. 2021ம் ஆண்டு குஜராத் முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் உணவுப் பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் போட்டி மற்றும் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே இந்த குறியீட்டின் நோக்கம் என்றும் குடிமக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதிசெய்வதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை ஊக்கப்படுத்துவதற்கான நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நட்டா, உணவு மூலம் பரவும் நோய்கள், ஊட்டச்சத்து பாதுகாப்பு, புதுவகை உணவுகள் மற்றும் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்ளும் போது, உணவு கட்டுப்பாட்டாளர்களின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
புதுப்புது கண்டுபிடிப்புகள் மற்றும் உணவு பாதுகாப்பு அமைப்புகளை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பு ஆகியற்றில் உணவு கட்டுப்பாட்டாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார்.
சர்வதேச வர்த்தகம், உணவு உற்பத்தி செயல்முறைகளை மேம்படுத்துதல் மற்றும் நுகர்வு முறைகளை மாற்றியமைத்தல் ஆகியவற்றில் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து FSSAI மேற்கொண்ட முயற்சிகளை அவர் பாராட்டினார்.
மேலும், சர்வதேச அளவுகோல்களுடன் உணவுப் பாதுகாப்புத் தரங்களை ஒத்திசைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “உணவுப் பாதுகாப்பு என்பது போதிய அளவு உணவு” என்று மட்டுமே அர்த்தமல்ல. “நாம் உட்கொள்ளும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதும் முக்கியம்” என்று பேசினார்.
“விதிமுறைகளின் தரநிலைகளை அமைப்பது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையும் பொறுப்புமாகும். பாதுகாப்பான உணவு மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் எஃப்எஸ்எஸ்ஏஐ மற்றும் எங்கள் துறை முக்கிய பங்கு வகிக்கிறது” என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.