திருப்பதியில் லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை உறுதி செய்த திருமலை தேவஸ்தானம் நெய் சப்ளை செய்யும் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி அமைந்து சுமார் 100 நாட்கள் ஆன நிலையில் திருப்பதி லட்டு குறித்தும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ஊழல் குறித்தும் சந்திரபாபு எழுப்பியுள்ள இந்த புதிய சர்ச்சை நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு தயாரிப்பதற்காக ஆண்டுக்கு இருமுறை டென்டர் மூலம் நெய் வாங்கப்படுகிறது.
ஒவ்வொரு 6 மாதத்திற்கும் சுமார் 1400 டன் நெய் வாங்கப்படும் நிலையில் கடந்த பல ஆண்டுகளாக நெய் சப்ளை செய்து வந்த கர்நாடக பால் உற்பத்தி சங்கமான நந்நினி நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்குவது நிறுத்தப்பட்டது.
2021ம் ஆண்டு முதல் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த ப்ரீமியர் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஆல்பா ஆகிய இரண்டு நிறுவனங்கள் முறையே எல்1 மற்றும் எல்2 ரக நெய்யை சப்ளை செய்து வந்தன.
எல்3 ரக நெய் மட்டும் நந்தினி நிறுவனத்திடம் இருந்து தொடர்ந்து வாங்கப்பட்ட நிலையில் 2023 ஜீலை மாதம் முதல் விலை உயர்வு காரணமாக நந்தினி நிறுவனத்திடம் இருந்து எந்த நெய்யும் வாங்கப்படவில்லை.
கடந்த பல ஆண்டுகளாக திருப்பதி லட்டுக்கு சுவையும் மனமும் சேர்த்து வந்த நந்தினி நெய் நிறுத்தப்பட்டது அப்போது பேசுபொருளானது.
இந்த நிலையில் தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில் திருமலை தேவஸ்தான லட்டு விவகாரம் அரசியலாகி உள்ளது.
திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படும் நெய்யில் கலப்படம் செய்யப்படுவதாகவும் அதிலும் மாட்டிறைச்சி கொழுப்பு மீன் எண்ணெய் ஆகியவை சேர்க்கப்படுவதாகவும் வெளியான தர பரிசோதனை அறிக்கை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஜீலை மாதம் எடுக்கப்பட்ட நெய் மாதிரிகளை குஜராத்தில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியதில் அதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக ஜீலை 19 அன்று அந்த பரிசோதனைக் கூடம் அறிக்கை அளித்துள்ளது.
இதனையடுத்து ப்ரிமியர் மற்றும் ஆல்பா ஆகிய நிறுவனங்களுடனான நெய் கொள்முதல் நிறுத்தப்பட்டு இந்த மாதம் செப்டம்பர் 4ம் தேதி முதல் மீண்டும் நந்தினி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திடீரென திருப்பதி லட்டு தயாரிக்க கடந்த ஆட்சியில் வாங்கிய நெய் கலப்பட நெய் என்ற தகவலை வெளியிட்டதால் ஆந்திராவில் பரபரப்பாகப் பேசப்பட்டது.
இதை உறுதி செய்யும் வகையில் ஜூலை 19ம் தேதி நடத்தப்பட்ட பரிசோதனை அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்த பரிசோதனை அறிக்கை வெளியான நிலையில் அது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நெய்யில் கலப்படம் குறித்து தெரிந்த பின் ஜூலை 19 முதல் செப்டம்பர் 4 வரை திருப்பதியில் லட்டு பிரசாதம் விநியோகம் நிறுத்தப்படாதது ஏன் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
மேலும், தனது அரசியல் ஆதாயத்துக்காக உலகில் உள்ள கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை அவர் புண்படுத்தி விட்டதாகவும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.