அகமதாபாத்:  வந்தே மெட்ரோ’ ரயில் சேவை பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இனி அது  ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என அழைக்கப்படும் என மத்தியஅரசு அறிவித்து உள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்து மெட்ரோவில் பயணிகளுடன் அமர்ந்து பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி.  அகமதாபாத்தில், இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ் என்ற இடத்திற்கு வந்தே மெட்ரோ ரெயிலை  பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். பின்னர், பயணிகளுடன் அதே  மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து மகிழ்ந்தார். சக பயணிகள், மாணவர்களிடமும் அவர் கலநத்துரையாடினார்.

இது இந்தியாவின் முதல் நமோ பாரத் ரேபிட் ரெயில் சேவை ஆகும்.  இந்த ரெயில் 360 கி.மீட்டர் தூரம் கொண்ட அகமதாபாத்- புஜ் இடையே இயக்கப்பட இருக்கிறது. 110 கி.மீ. வேகத்தில் இந்த ரெயில் செல்லக்கூடியது. அஞ்சார், காந்திதாம், பச்சாயு, ஹல்வாத், த்ரங்காத்ரா, விராம்காம், சந்த்லோதியா, சபர்மதி, அகமதாபாத்தில் உள்ள கலுபுர் ஆகிய ரெயில் நிலையங்கள் அடங்கியுள்ளன. வாரத்திற்கு ஆறு நாள் இந்த ரெயில் இயக்கப்படும். சனிக்கிழமை புஜ் நகரில் இருந்து புறப்படாது. ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் இருந்து புறப்படாது. இந்த ரெயில் மற்ற ஆறு நாட்களில் காலை 5.05 மணிக்கு புஜ் நகரில் இருந்து புறப்படும்.

காலை 10.50 மணிக்கு அகமதாபாத் சென்றடையும். மறுமார்க்கத்தில் அகமதாபாத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும். இரவு 11.20 மணிக்கு புஜ் நகரை சென்றடையும்.

இந்த ரெயிலில் 1,150 பயணிகள் அமர்ந்து செல்லமுடியும். 2,058 பேர் நின்று கொண்டு பயணம் செய்ய முடியும். இந்த ரெயில் முழுவதும் ஏ.சி. வசதி கொண்டது. புஜ் நகரில் இருந்து அகமதாபாத்திற்கு செல்ல சுமார் 430 ரூபாய் ஆகும். குறைந்தபட்ச டிக்கெட் விலை 30 ரூபாய் ஆகும். தொடர்ந்து பணம் செய்பவர்கள் வாரம், இருவாரம், மாத சீசன் டிக்கெட் பெறும் வசதி உள்ளது.

இந்த நிகழ்வில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இதற்கிடையே, வந்தே மெட்ரோ ரெயில் (Vande Metro Rail) நமோ பாரத் ரேபிட் ரெயில் (Namo Bharat Rapid Rail) என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.