சென்னை : தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதாக, பிரபல மருத்துவபர் காந்தாராஜ்மீது, நடிகை ரோகிணி புகார் கொடுத்துள்ளார். அதன்படி, டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆபாசமாக பேசுதல், பெண்ணின் மாண்பை அவமதிக்கும் வகையில் பேசுதல், தனிநபரை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கேரளாவில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கையில் மலையாள சினிமாவில் நடிகைகள், பெண்களுக்கு நிகழும் பாலியல் அத்துமீறல்கள், தொல்லைகள் குறித்தும் கூறப்பட்டிருந்தது.இந்த அறிக்கை வெளியான பின்னர் தமிழக திரையுலகிலும் பாலியல் தொடர்பான கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், யாரும் அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்கவில்லை.
ஆனால், மலையாள சினிமா போல் தமிழ், தெலுங்கு சினிமாக்களிலும் பாலியல் சீணடல்களும், பாலியல் தொல்லைகளும் இருப்பதாக ராதிகா, குஷ்பூ உள்ளிட்ட சில மூத்த நடிகைகள் பேசினர். இதற்கிடையே தமிழ் சினிமாவில் நிகழும் அட்ஜெஸ்ட்மெண்ட்கள் குறித்தும், வாய்ப்புக்கான வலையில் சிக்கும் நடிகைகளும் குறித்து பல்வேறு யூடியூப் சேனல்களில் சினிமா பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் என பலரும் பேசினர்.
இதுபோல, பிரபல விமர்சகரும் அரசியல், சினிமா குறித்து பல்வேறு விஷயங்களை பேசுபவருமான டாக்டர். காந்தராஜ் யூடியூப் சேனல்களில் அளிக்கும் பேட்டியில் பல்வேறு நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது குறித்து பேசி இருந்தார்.
காஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்புக்கான வலையில் நடிகைகள் சிக்குவது பற்றியும் அவர் வெளிப்படையாக சில நடிகைகளின் மறைமுகமாக சாடினார் நடிகை கள் படத்தில் நடிப்பதற்கு முன்னரே இதுபற்றி அனைத்து தெரிந்தும் ஓகே சொல்லிவிட்டு, பின்னர் பல ஆண்டுகளுக்கு பிறகு புகார் அளிப்பதாகவும் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் இருந்தே அட்ஜஸ்மெண்ட் என சினிமாவில் தொடர்ச்சியாக இருந்து வருவதாகவும் கூறியுள்ளார்.
வெறும் நடிகர்களை மட்டுமல்லாமல் இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்பட தொழில்நுட்ப கலைஞர்களையும் அட்ஜெஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் நடிகைகள் இருக்கிறார்கள் எனவும் அவர் பேசியது சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த ரோகிணி, டாக்டர். காந்தராஜ் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார்.
குறிப்பிட்ட வீடியோவில் “நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக பேசியுள்ளார். தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பை கொச்சப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது. அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. சம்மந்தப்பட்ட விடியோ யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட வேண்டும்” என ரோகிணி அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.