ஐ.டி. நிறுவன ஊழியரை கடத்தி ரூ. 1.5 கோடி பணம் பறித்த ஒரு பெண் உள்ளிட்ட 4 ஜிஎஸ்டி அதிகாரிகளை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு ஜீவன் பீமாநகரில் மெக்ஸோ சொலுஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் இயங்கி வரும் ஐ.டி. நிறுவன ஊழியர் கேசவ் தக், பயப்பனஹள்ளி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30ம் தேதி இரவு கேசவ் தக் தங்கியிருந்த வீட்டிற்குள் புகுந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த கேசவ் தக் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேரை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றார்.

தாங்கள் அனைவரும் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் ஜிஎஸ்டி அதிகாரிகள் என்றும் தனது வங்கிக்கணக்கு மூலம் கேசவ் தக் பலகோடி ரூபாய் மோசடி செய்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.

மேலும், இந்த விசாரணையில் இருந்து தப்பிக்க ரூ. 3 கோடி கேட்டு மிரட்டியுள்ளனர். இதையடுத்து கேசவ் தக்கின் நண்பருக்கு போன் செய்து பணத்திற்கு ஏற்பாடு செய்யும்படி கூறியுள்ளனர்.

அவர்கள் எதிர்பார்த்தது போல் மறுநாள் அவரது நண்பர் பணம் கொண்டு வராததால் மீண்டும் அழைத்தபோது ரூ. 1.5 கோடி கொடுக்க சம்மதித்துள்ளனர்.

இதையடுத்து செப். 1ம் தேதி ரூ. 1.5 கோடியை பெற்றுக்கொண்டு கேசவ் தக் மற்றும் அவரது நண்பர்களை விடுவித்த நிலையில் இதுகுறித்து பயப்பனஹள்ளி காவல் நிலையத்தில் கேசவ் தக் புகார் அளித்தார்.

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அபிஷேக் குமார், 32, நாகேஷ் பாபு, 50, மனோஜ் சைனி, 40, மற்றும் சோனாலி சஹாய், 29 ஆகிய நான்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான அபிஷேக் குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.