டெல்லி – பாட்னா இடையிலான மகத் எக்ஸ்பிரஸ் ரயில் பீகாரின் துனிகஞ்ச் ரயில் நிலையம் அருகே இரண்டாக பிரிந்தது.

பக்சர்-ஆரா ரயில் பிரிவில் துனிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11:07 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

S-6 மற்றும் S-7 ஆகிய கோச்களுக்கு இடையிலான இணைப்பு உடைந்தது. ஓடும் ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்ததால் பயணிகள் பீதியடைந்தனர்.

ரயில் பெட்டிகளுக்கு இடையிலான இணைப்பு உடைந்ததை அடுத்து காற்றுக்குழாயில் வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட பெரும் வெடிசத்தத்தில் ரயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மற்றும் ஸ்லீப்பர் கட்டைகள் பறந்தன.

இதைப் பார்த்த பயணிகள் ரயில் தடம் புரண்டுவிட்டதாக அச்சமடைந்தனர்.

இந்த சத்தை அடுத்து எஞ்சினுடன் இணைக்கப்பட்ட S-1 முதல் S-6 வரையிலான ரயிலை ஓட்டுநர் நிறுத்தினார்.

200 மீட்டர் தூரம் வரை ஓடிச் சென்று ரயில் நின்றதை அடுத்து பயணிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

இதில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த ரயிலை இணைத்து மீண்டும் இயக்கும் பணியில் ரயில்வே குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.