விழுப்புரம்: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக விழுப்புரம் காவல் துறை கேட்டிருந்த 21 கேள்விகளுக்கான விளக்கத்தை த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் டி.எஸ்.பி.யை இன்று நேரில் சந்தித்து அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தவெக மாநாட்டில் கலந்துகொள்ள 50ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் சிறுவர்களுக்கு அனுமதி கிடையாது என்று கூறினார்.

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு செப்டம்பர் 23ஆம் தேதி விக்கிரவாண்டியில் பிரமாண்டமாக  நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் கெடுபிடி காரணமாக,  சுமார் 50ஆயிரம் பேர் வரை மட்டுமே கலந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தவெக மாநாட்டில்  ஆண்கள் 30 ஆயிரம் பேர், பெண்கள் 15 ஆயிரம் பேர்,  முதியவர்கள் 5ஆயிரம் பேர்   மாற்றுத்திறனாளிகள் 500 பேர் என மொத்தம் 50ஆயிரத்து 500 பேர்   பங்கேற்பார்கள் என்று புஸ்ஸி ஆனந்த், தெரிவித்துள்ளார்.  மேலும்,  இந்த மாநாட்டிற்கு சிறுவர் சிறுமிகள் அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெறுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்காக அனுமதி கேட்டு கடந்த 28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விஜய் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்திருந்த நிலையில் காவல்துறை சார்பில் மாநாடு நடத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு 21 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அதற்கான பதிலினை விழுப்புரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் டிஎஸ்பி சுரேஷிடம் வழங்கினர். உடன் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், “ஐந்து நாட்களுக்குள் பதில் கேட்டிருந்தார்கள். அதற்கான பதிலளித்திருக்கிறோம். இன்னும் இரண்டு நாட்களில் மாநாடு நடத்துவது தொடர்பாக பதில் அளிப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின்னரே கட்சியின் தலைவர் விஜய், மாநாடு குறித்த அறிவிப்பினை வெளியிடுவார்” என்றார்.

மாநாடு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகள்:

மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, எனவே, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்

மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம்?

மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார்? அவர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?

மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் பெயர் பட்டியல்.

மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவிருக்கும் நபர்களின் பெயர் விவரம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன?

மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம்.

மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம்.

மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள்? யாருடை தலைமையில் வருவார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை? (இருச்சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகள் விவரம்)

மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்? அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?

மாநாட்டில் வாகனங்கள் நிறுத்து மிடங்களில் பாதுகாப்பு பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா? அவர்களின் பெயர் விவரம் மற்றும் சீருடை விவரம்?

மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் விவரம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர், பாட்டில் வகையா? அல்லது தண்ணீர் டேங்க் மூலமாகவா? (குடிநீர், கழிப்பிடம்… இதர.,)

மாநாட்டிற்கு வரும் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா? அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையற்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா?

மாநாட்டில் தீவிபத்து தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு செய்யப்படவுள்ள விவரம்.

மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா? அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக் குழு மற்றும் ஆம்புலன்ஸின் விவரங்கள்.

மாநாட்டில் கலந்து கொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் விழா மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்.

மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்திற்கும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?

மாநாட்டிற்கு பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது? அதற்கான அனுமதி விவரம்.

இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கேள்விகள் அனைத்துக்கும் தவெக சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, காவல்துறை  மாநாடு அனுமதி தொடர்பாக முடிவு எடுத்து அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மாநாடு நடத்துவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையை காரணங்காட்டி தமிழக அரசின் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டால், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இதே விக்கிரவாண்டி சாலை பகுதியில் தான் இந்தியா கூட்டணி சார்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்ற, விழுப்புரம் மற்றும் கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிமுக மாநாடு நடத்தப்பட்டது என்கிற விவாதம் எழுப்பப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.