சென்னை: திமுக அமைச்சர்கள்மீதான சொத்து குவிப்பு வழக்கை மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதி மன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் (2006 – 2011) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்களும், தற்போதும் திமுக அமைச்சர்களாக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோர் தங்களின் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன.
2006-11ஆம் ஆண்டுகளில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. அதேபோல், 2006-11ஆம் ஆண்டுகளில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவி ரூ.76.40 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2012ஆம் ஆண்டில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் திமுக 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் நமத்துபோகின. அமைச்சர்கள் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
அதாவது, லஞ்ச ஒழிப்புத் துறை அளித்த மேல் விசாரணை அறிக்கை அடிப்படையில் 2022ஆம் ஆண்டில் தங்கம் தென்னரசுவை விடுவித்தும், 2023ஆம் ஆண்டில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனை விடுவித்தும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இந்த இரு உத்தரவுகளுக்கும் எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்தாண்டு தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். இந்த வழக்கின் விசாரணைக்கு பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அளித்த இரு உத்தரவுகளை ரத்து செய்து, வழக்குகளை மறுவிசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் செப். 9ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிட்டிருந்தது.
உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர்கள் தரப்பு மேல்முறையீடு செய்தது. அதில் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், தங்கம் தென்னரசு மனைவி தரப்பில் அபிஷேக் மனு சிங்வி, மூத்த வழக்கறிஞர் முரளிதரன் உள்பட பிரபல வழக்கறிஞர்கள் ஆஜராகினர். மேலும், எதிர்தரப்பாக தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பிசி ராமன் ஆஜராகினார்.
உச்ச நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடும்போது, “இந்த வழக்கை முடித்து வைப்பதற்கான காரணங்களை சுட்டிக்காட்டி ஆவணங்களை சமர்பித் தோம், ஆனால் அதை தனி நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை, இது அப்பட்டமான விதிமுறை மீறல். மேலும், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வே விசாரிக்க வேண்டும் என்பது விதிமுறை, ஆனால் இதனை தனி நீதிபதி விசாரித்துள்ளனர்.
நீதிமன்றங்கள் தானாக முன்வைந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்போது (Suo-Moto) புகழ்பெற்ற சகாரியா வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதிமன்றங்களுக்கு அளித்த வழிகாட்டு நெறிமுறைகளை, தனி நீதிபதி இதில் பின்பற்றவில்லை” என்ற வாதங்கள் முன்வைத்துள்ளன.
இதை தொடர்ந்து, அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்துகுவிப்பு வழக்குகளை மறுவிசாரணை செய்ய ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு நான்கு வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.