சென்னை: பாரிசில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் 3வது முறையாக பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கமகன் மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. அங்கு நேற்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் இரண்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், தமிழ்நாடு சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதன்மூலம் மாரியப்பன் தங்கவேலு,  பாரா ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கமான  எக்ஸ் தளத்தில்,

மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள்! தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்

. மாரியப்பன் தங்கவேலு ரியோ (பிரேசில்), டோக்கியோ (ஜப்பான்) பாரா ஒலிம்பிக் போட்டியில் ஏற்கனவே பதக்கம் வென்றுள்ளார். தற்போது 3-வது பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் பாராலிம்பிக் 2024: உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 2 பதக்கம் – 3ஆவது முறையாக பதக்கம் வென்றார் தமிழக வீரர் மாரியப்பன்