சென்னை: குரூப்-4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான  டிஎன்பிஎஸ்சி அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசுக்கு தேவையான காலி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்றவர்களை நியமனம் செய்து வருகிறது. அன்படி,  தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரித்தண்டலர், வனக்காப்பாளர், நேர்முக உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9-ந்தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நேற்று முன்தினம் குரூப்1 தேர்வு முடிவு வெளியான நிலையில், இந்த தேர்வு முடிவுகளும் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பப்பட்டு வந்தன.

இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் தற்காலிகமாக அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் டி.என்.பி.எஸ்.சி, வெளியிட்டுள்ளது.