வாஷிங்டன்: வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் ஏஐ(AI) ஆய்வகங்களை அமைக்க கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள நிலையில், சான் பிரான்சிஸ்கோவில் நடந்த முதல் நாள் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நோக்கியோ, ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி உள்ளிட்ட 6 முன்னணி நிறுவனங்கள் ரூ.900 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனால் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, நேற்று அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு சென்றவர், அங்குள்ள ஆலைகளை பார்த்ததுடன், அந்நிறுவன உயர் அலுவலகர்களை சந்தித்து பேசினார்.
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசியதுடன், தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்வது குறித்து பேசினார். இதில், கூகுள் நிறுவனத்துடன் ஏஐ ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பிக்சல் 8 போன்கள் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதுடன், கூகுள் நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை தமிழ்நாட்டில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன் டேட்டா சென்டர் விரிவாக்கம், AI திறன் முயற்சிகளை உருவாக்குவது உள்ளிட்டவைகளில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து, கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டு நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு(Artificial intelligence) ஆய்வகங்கள் நிறுவவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.