சென்னை: ஆகஸ்டு மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வாங்காதவர்கள், செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை அதற்கான பொருளை பெற்றுக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சமீப காலமாக ரேசன் கடைகளில் பாமாயில், பருப்பு உள்பட சில பொருட்கள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். இதையடுத்து, ரேசன் பொருட்களை வாங்காதவர்கள் மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் உணவுபொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், பொது விநியோகத் திட்ட குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 2024 மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் செப்டம்பர் மாதம், 5 ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீட்டினை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் முழுமையாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில், பொதுமக்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை வரும் செப்டம்பர் 2024, மாதம் 5 ஆம் தேதிவரையில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.