சென்னை:  மூத்த குடிமக்கள் வைணவ கோயில்களுக்கு ஒருநாள் இலவச ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் வசதியை இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.

ஏற்கனவே ஆடிமாதத்தில் அம்மன் கோவில்களுக்கு இலவச பயணம் அழைத்துச் சென்ற நிலையில்,  புரட்டாசி மாதத்தில் வைணவக் கோயில்களுக்குச் செல்ல விரும்பும் மூத்த குடிமக்களுக்காக, ஆன்மிக பயணமாக தமிழ்நாடு  இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை  வெளியிட்ட அறிக்கையில்,  ஆடி மாதத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கும் இறை தரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட, தலா 1,000 பக்தர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.

அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் உள்ள முக்கிய வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் மேற்கொள்ளும் ஆன்மிகப் பயணத்தில் 1,000 மூத்த குடிமக்கள் கட்டணமின்றி (உணவு உள்பட) அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணம் நான்கு கட்டங்களாக, அதாவது செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய நாட்களில் அந்தந்த மண்டலங்களில் தொடங்கப்பட உள்ளன.

சென்னை மண்டலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், மகாபலிபுரம் ஸ்தல சயன பெரு மாள் கோயில் ஆகிய கோயில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

அதேபோல் காஞ்சிபுரம் மண்டலத்தில், காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், விளக்கொளி பெருமாள் கோயில், பாண்டவதூத பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் கோயிலுக்கும்,

விழுப்புரம் பகுதியில் விழுப்புரம் ஆஞ்சநேயர் சுவாமி கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், கோலியனூர் வரதராஜ பெருமாள் கோயில், பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் ஆகிய கோயில்களுக்கும் அழைத்து செல்லப்பட இருக்கின்றனர்.

ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விரும்பும் மூத்தகுடிமக்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்பங்களை அறநிலையத்துறையின் இணையதளமான www.hrce.tn.gov.in,  http://www.hrce.tn.gov.inலிருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் பெற்றோ விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து செப்டம்பர் 19ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.