சென்னை: தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய மத்தியஅரசின் கல்வி நிதி நிறுத்தப்பட்டுள்ளது சர்ச்சையான நிலையில், அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்குபி.எம்.ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு கையெழுத்திட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்து உள்ளது.
பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையொப்பமிடுவதாக 15.03.2024ல் தமிழ்நாடு உறுதி அளித்திருந்தது. அதன்படி, பி.எம்.ஸ்ரீ. திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை ஆதரிக்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் காட்டிலும் குழந்தைகளின் உலகத்தரம் வாய்ந்த கல்விக்கு முன்னுரிமை தருக என வலியுறுத்தி உள்ளார்.
முன்னதாக, சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய முதல் தவணையான ரூ.573 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என இரண்டு நாள்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு அரசு தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ஏற்க வேண்டும் என்றும், ஏற்கனவே கூறியபடி பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்
அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசு மாணவர்கள் தாய்மொழி உட்படப் பல மொழிகளைக் கற்க வேண்டும் என முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை 2020, மாணவர்களுக்குத் தமிழ் மொழி பயிற்றுவிப்பதை முழுமையாக ஆதரிக்கிறது. நாட்டின் மூலைமுடுக்குகளில் உள்ள குழந்தைகளும் புதிய கல்விக் கொள்கையின் நன்மைகள் சென்றுசேர வேண்டும் என உறுதியாக இருக்கிறது.” என எழுதியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு தொடக்கத்தில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட சம்மதித்ததாகவும், பின்னர் தமிழ்நாடு சார்பிலான வரையறை, தேசியக் கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்துவதற்காக முக்கிய கடைமைகளைத் தவிர்த்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக, “பலமுறை கோரிக்கை விடுத்தும் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்திற்கான வரையறையில் கையெழுத்திடவில்லை” என சுட்டிக்காட்டி யதுடன், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் தேசியக் கல்விக் கொள்கையின் பகுதி என்றும் தமிழ்நாடு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் அழுத்தமாக தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இரு மொழிக் கொள்கை உள்ளிட்ட தமிழக அரசின் கொள்கைகளை தேசியக் கல்விக் கொள்கை கேள்விக்குட்படுத்துவதால் அதனை உறுதியாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு.
இதுதொடர்பாக செய்தியளார்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தர்மேந்திர பிரதானின் கடிதத்துக்குப் பதிலளிக்கும் வகையில், “தமிழக முதல்வர் ஒரு குழுவை அமைத்து தமிழ்நாடு கல்விக் கொள்கை என்ற கொள்கையை உருவாக்கியிருக்கிறார். அதை நிச்சயமாகப் பயன்படுத்துவோம்.” என தெரிவித்துள்ளார்.