ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள சங்கனேர் சதர் பகுதியில் இருந்து கடத்தப்பட்ட குழந்தையை போலீசார் மீட்ட நிலையில் அந்த 2 வயதுக் குழந்தை தனது தாயிடம் செல்ல மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்திர பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர் உ.பி. மாநில காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இவரது உறவினரும் முறைப்பெண்ணுமான நபர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவரது இருப்பிடமான ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சென்று தன்னுடன் வந்து வாழுமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையில் அவர் மீது புகார் அளிக்கப்பட நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தொடர்ந்து தனது அடியாட்களுடன் வந்து தொல்லை கொடுத்து வந்த அவர் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி குக்கு என்றழைக்கப்படும் பிருத்வி என்ற அந்தப் பெண்ணின் 11 மாத குழந்தையை கடத்திச் சென்றார்.
இதனையடுத்து தலைமறைவான தனுஜ் சாஹர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பலமாதங்களாக பணிக்கு வராத காரணத்தால் உ.பி. போலீசார் அவரை பணி நீக்கம் செய்தனர்.
தனுஜ் சாஹரை தொடர்ந்து தேடி வந்த ஜெய்ப்பூர் காவல்துறையினர் அவரைப் பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. 25000 பரிசுத் தொகை அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அவர் உ.பி. மாநிலம் அலிகாரை அடுத்த விருந்தாவன் பகுதியில் ஒரு குடிசை பகுதியில் குழந்தையுடன் வாழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் அவனை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதனையடுத்து 14 மாதங்களாக அவனுடன் இருந்த குழந்தையை மீட்டு தாயிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
தற்போது 2 வயதாகும் அந்த சிறுவன் தன்னை 14 மாதங்களாக வைத்திருந்த கடத்தல்காரன் தனுஜ் சாஹரிடம் இருந்து தாயிடம் செல்ல மறுத்ததால் தனுஜ் சாஹர் மற்றும் அந்தக் குழந்தையின் தாய் இருவரும் கண்ணீருடன் அந்தக் குழந்தைக்காக போராடினர்.
பின்னர் ஒருவழியாக அந்தக் குழந்தையை தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர் தனுஜ் சாஹர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.