சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க அந்த பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், எதிர்ப்பை மீறி நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழ்நாடு அரசு முடுக்கி விட்டுள்ளது.
இதனால் கடும் கோபத்தில் உள்ள பரந்தூர் மற்றும் ஏகானபுரம் உள்பட கிராம மக்கள், தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால் மொத்தமாக தற்கொலை செய்துகொள்வோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிரான போராட்டம் இன்று 767வது நாளாக தொடரகிறது.
சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம், பயணிகள் மற்றும் சரக்கு சேவைகளை எதிர்கொள்ள போதுமானதாக இல்லாத நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூரில் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக அந்த பகுதியில் உள்ள பரந்தூர், ஏகனாபுரம் உள்பட 13 கிராமங்கள், அங்குள்ள நீர் நிலைகள் அகற்றப்பட உள்ளன. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழநாடு அரசு முடுக்கி விட்டுள்ளத.
ஆனால், பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க அந்த பகுதி கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். ஆனால், அரசும் அதிகாரிகள், அவர்களின் எதிர்ப்பை மீறி, ஏகனாபுரத்தில் நிலம் கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
விமான நிலையம் குறித்து எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே பொதுமக்களுக்கு உறுதியளித்திருந்த நிலையில், அதற்கு நேர்மாறாக நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு வெளியிட்ப்பட்டது, அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. . இந்த அறிவிப்புக்கு கிராம நிர்வாகமே பொறுப்பு என்று கூறிய மக்கள் இரவோடு இரவாகத் திரண்ட500க்கும் மேற்பட்டோர் விமான நிலையத்தை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை அரசு எடுத்தால் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்வோம் என்றும் கிராம மக்கள் எச்சரித்துள்ளனர். அப்படி எதாவது நடந்தால் கிராம மக்களின் உயிரிழப்புக்குக் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கிராம மக்கள் போராட்டம் குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவர்களைக் கைது செய்ய முயன்றனர். இருப்பினும், அங்கே கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் அவர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டம் தொடரும் என்று அறிவித்து கிராம மக்கள், அப்போது தான் தங்கள் நிலத்தை விட்டுத் தர மாட்டோம் எனக் கூறி, அடுத்த கட்ட போராட்டமாகத் தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும், தன்னை ஒரு விவசாயி என்றும் விவசாயிகளின் நண்பர் என்றும் என்றும் அழைத்துக் கொள்ளும் அதிமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தங்கள் கிராமத்திற்கு ஒருமுறை கூட வராமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.