சென்னை: ஒரே நிர்வாகத்தைச் சேர்ந்த 3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று காலை  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பள்ளி மாணாக்கர்கள், பெற்றோர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து  அந்த பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் உள்ள பல பிரபலமான பள்ளிகளுக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற மிரட்டர்கள் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், அதை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் காவல்துறையினர் கூறி வருகின்றனர். இநத் நிலையில், அமெரிக்கா சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் விமானத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. துபையில் தரையிறங்கிய விமானத்தை சோதனை செய்த அதிகாரிகள், இந்த மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது.

இந்த நிலையில், இன்று காலை  ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள ஒரே நிறுவனத்தை சேர்ந்த பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்  விடுக்கப்பட்டுள்ளது.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பள்ளிகளுக்கு குவிந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த தகவல் குறித்து அறிந்த  வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  ஈரோட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தனியார் பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். அதேபோல், சேலம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளிலும், வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூன்று மாவட்டங்களிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட அனைத்து பள்ளிகளும் ஒரே நிறுவனத்துக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.