சென்னை: மாநில தலைவர் சென்னையில் கடந்த 7 நாட்களில் 23 குற்றவாளிகள்  கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர் என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தமிழ்நாடு அரசு, குண்டர் சட்டத்தை முறையாக பயன்படுத்தவில்லை என கூறி, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை அடுத்தடுத்து விடுவித்து வருவதுடன், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. ஆனால், அதை கண்டுகொள்ளாத காவல்துறையினர் குற்றவாளிகள் மீதான வழக்குகளை விசாரிக்காமல்,  விசாரணையின்றி ஓராண்டு சிறையில் இருக்கும் வகையிலான குண்டர் சட்டத்தை ஏவி நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்பேரில், நடப்பாண்டில் 01.01.2024 முதல் 25.08.2024 வரை சென்னை பெருநகரில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சட்டம் ஒழுங்கு குற்றங்களில் ஈடுபட்ட 482 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 134 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 199 குற்றவாளிகள், குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 29 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 07 குற்றவாளிகள், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 07 குற்றவாளிகள், பாலியல் தொழில் நடத்திய 17 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் படுத்திய 06 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் 04 குற்றவாளிகள் என மொத்தம் 885 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்பேரில் கடந்த 19.08.2024 முதல் 25.08.2024 வரையிலான 7 நாட்களில் 23 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முருகன், ரஞ்சித்,ராபர்ட், தமிழரசன், அருண் பரத்குமார், ஆர்.கார்த்திக்,அப்பு, நாகராஜ், மணிகண்டன்,விக்கி,கணேஷ், ரவிச்சந்திரன், முரளி, சைலேந்தர், மணிகண்டன், கார்த்திகேயன், கிஷோர்குமார்,  சந்திரகுமார், சங்கர் கணேஷ், மணி 23 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள், கொலை, கொலை முயற்சி, திருட்டு குற்றங்களில் ஈடுபடும் நபர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்தல் மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பவர்கள் உள்பட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

குண்டாஸ் சட்டத்தை தமிழ்நாடு அரசும், காவல்துறையும் எப்படி சாதாரணமாக பயன்படுத்துகிறது? சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் கண்டனம்…