டெல்லி, 90% இந்திய மக்களுக்காகவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், நீங்கள் நடத்தவில்லை என்றால் அடுத்த பிரதமர் நடத்துவார் என மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் , மோடி ஜி, சாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள் நிறுத்த நினைப்பது கனவு போன்றது. இப்போது எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது, நாட்டிலுள்ள 90 சதவீத மக்கள் பயன் பெற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்
இந்த உத்தரவை இப்போதே நடைமுறைப்படுத்துங்கள், இல்லையேல் அடுத்த பிரதமர் இதை செயல்படுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளார்.
இதற்கிடையில் உ.பியில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல்காந்தி பேசும்போது, “இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். இந்தியாவில் 90 சதவீத மக்கள் நிர்வாக அமைப்பை விட்டு விலகி வெளியே உள்ளனர். அவர்களுக்காக இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியம். 90 சதவீத மக்களுக்கு திறனும், கல்வி அறிவும் இருந்தும் நிர்வாக அமைப்புடன் அவர்களுக்கு தொடர்பு இல்லை. இதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரசுக்கு ஒரு கொள்கை கட்டமைப்பு மற்றும் வழிகாட்டி. அரசியலமைப்புச் சட்டம் நாட்டின் 10 சதவீத மக்களுக்கானது அல்ல, அது அனைத்து குடிமக்களுக்கானது. அரசியலமைப்பு ஏழை மக்கள், தொழிலாளர்கள், பழங்குடியினர் ஆகியோரால் பாதுகாக்கப்படுகிறது” நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாவிட்டால், அடுத்த பிரதமர் பதவியேற்பார் அப்போது இது செயல்படுத்தப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தனியார் தொலைக்காட்சி ஒன்று ராகுல் காந்திக்கு ஆதரவாக, மக்கள் கருத்து என செய்தி வெளியிட்ட நிலையில், அதை சுட்டிக்காட்டி ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.