லக்னோ:  சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் செய்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் உ.பி. மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உ.பி அரசு ஊழியர்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும், இல்லையெனில் மாத சம்பளத்தை இழக்க வேண்டும்  மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் இந்த சம்பளத்தை பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச (உ.பி.) அரசு, மாநில அரசின் ‘மானவ் சம்பதா’ போர்ட்டலில் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் தங்கள் ஊழியர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் மாதாந்திரச் சம்பளம் நிறுத்தப்பட்டு அவர்களின் பதவி உயர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து உள்ளது. . இதற்கான ஆரம்ப காலக்கெடு 2023 டிசம்பர் 31 என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது, முன்பு ஜூன் 30, பின்னர் ஜூலை 31 மற்றும் இப்போது ஆகஸ்ட் 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்பிறகு, கால அவகாசம் வழங்கப்படாது என அறிவித்து உள்ளது.

உ.பி  மாநில அரசின் 17.88 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், சுமார்  26 சதவீதம் பேர் மட்டுமே இந்த உத்தரவை இதுவரை கடைபிடித்துள்ளனர். அவர்கள் மட்டுமே தங்களது சொத்து விவரங்கைள தாக்கல் செய்து்ளளன்ர.  இதனால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதவர்களின் சம்பளத்தை நிறுத்த மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் சொத்து விவரங்களைச் சமர்ப்பிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே ஆகஸ்ட் மாத சம்பளம் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் சிங் தெளிவுபடுத்தியுள்ளார். இணங்கத் தவறியவர்களுக்கான சம்பளம்  நிறுத்தப்படும்.  இதனால்,  இதுவரை தங்கள் சொத்து விவரங்களை தெரிவிக்காத 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பாதகமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அஞ்சப்படுகிறது.

இதுகுறித்து கூறிய, அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி, இந்த நடவடிக்கை அரசாங்கத்திற்குள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும், ஊழலுக்கு எதிரான ஆதித்யநாத்தின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கைக்கு இணங்குவதாகவும் கூறினார்.

இதற்கிடையில், எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி (SP) இந்த நடவடிக்கையின் நேரத்தையும், பல காலக்கெடு நீட்டிப்புகளுக்குப் பிறகும் அரசால் ஏன் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.