ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்க நேற்று ஸ்ரீநகர் சென்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி இருவரும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவை இன்று சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புக்கு பின் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பரூக் அப்துல்லா அறிவித்தார்.

90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்துக்கு செப்டம்பர் 18, செப் 25 மற்றும் அக்டோபர் 1 என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சி தவிர மெஹபூபா முக்தி தலைமையிலான பி.டி.பி. கட்சியுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறிய பரூக் அப்துல்லா முடியாத பட்சத்தில் தேர்தலுக்கு பின்னராவது அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை துண்டாட நினைக்கும் தீய சக்திகள் தான் தங்கள் முதல் எதிரி என்று கூறிய பரூக் அப்துல்லா அதற்காக ஒருமித்த கருத்துடையவர்களுடன் கூட்டணி அமைக்க தயங்கமாட்டோம் என்று தெரிவித்தார்.

மேலும், சுதந்திர இந்தியாவின் இத்தனையாண்டு வரலாற்றில் யூனியன் பிரதேசமாக இருந்த பகுதிக்கு மாநில அந்தஸ்து வழங்கி வந்ததைத் தான் பார்த்துள்ளோம் ஆனால் முதல்முறையாக ஜம்மு காஷ்மீருக்கான மாநில அந்தஸ்து பறிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் மக்கள் பாடம்புக்காட்டுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் இடையேயான கூட்டணி உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஸ்ரீநகர் பயணம்… தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் விவாதிக்க உள்ளார்…