டெல்லி

ஜெய்ராம் ரமேஷ் 12 கோடி இந்தியர்களுக்கு மக்கள் கணக்கெடுப்பு தாமதத்தால் ரேஷன் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

 

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு கொரோனா நெருக்கடி காரணமாக கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.  2021-ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை அடுத்த மாதம் முதல் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம்,

“மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் மட்டுமே செய்திகள் வெளியாகியுள்ளன. இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் 2021-ம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் 3.5 ஆண்டுகாலம் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், 2013 அல்லது பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்றுவந்த சுமார் 12 கோடி இந்தியர்களுக்கு தற்போது ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை.

மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது எஸ்.சி., எஸ்.டி. மக்கள்தொகை தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்நிலையில், தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறும் பட்சத்தில், ஓ.பி.சி. பிரிவினரின் விவரங்களையும் சேர்த்து சேகரிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அவ்வாறு செய்தால், அதுவே சாதிவாரி கணக்கெடுப்பாக மாறிவிடும்.  சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகளே மேற்கொள்ளலாம். ஆனால் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது மத்திய அரசின் பணியாகும். எனவே, மத்திய அரசு தனது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.