சென்னை

குஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். காவல்துறையினரின் தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நெல்சனின் மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

நெல்சன் மனைவி மோனிஷாவின் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என விளக்கம் அளித்துள்ளார். மோனிஷா காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், காவல்துறை விசாரணையில் தன்னால் முடிந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்ததாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷா வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில் தாம் காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய நிலையில் தம்மை குறித்து தவறான தகவல் பரப்புபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை, இயக்குநர் நெல்சன் மனைவி, பொது அறிவிப்பு,